தினசரி உணவில் ஏதோ ஒரு வகையில் துவரம் பருப்பு, கடலை பருப்பு, உளுந்து போன்ற பருப்புகளுடன் ராஜ்மா, கொண்டைக்கடலை போன்றவற்றை சாப்பிட்டால் சிலருக்கு வயிற்று உப்புசமும், வயிற்றில் தசைப்பிடிப்பும், வாய்வுத் தொந்தரவும் ஏற்படும்.
இப்படிப்பட்ட உணவுகளை அறவே தவிர்க்கவும் நினைப்பார்கள். இதற்கு தீர்வு என்ன? வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட்ஸ் என்ன சொல்கிறார்கள்?
“வயிற்று உப்புசம், வாய்வுத் தொந்தரவு, வயிற்றைக் கசக்கிப் பிடித்து விடுவிக்கிற மாதிரியான வலி… இந்தப் பிரச்சினைகளை நம்மில் பலரும் அடிக்கடி அனுபவிப்பதுண்டு.
குறிப்பாக, ராஜ்மா, மொச்சை, வெள்ளைக் கொண்டைக்கடலை போன்ற சில பருப்பு வகைகள் ஏற்றுக்கொள்ளாமல், செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
பருப்பு உள்ளிட்ட சில உணவுகள் செரிமானமாக அதிக நேரம் எடுப்பதால், வாய்வுத் தொந்தரவையும், வயிற்று உப்புசத்தையும் ஏற்படுத்தலாம்.
அப்படியானால், இவற்றை எல்லாம் சாப்பிடவே கூடாதா என்றால், இந்தப் பருப்பு வகைகளை ஊற வைக்கும்போதும், சமைக்கும்போதும் நிறைய இஞ்சி சேர்ப்பதை வழக்கமாகப் பின்பற்றுங்கள்.
தவிர, இவற்றை வாரத்துக்கு இரண்டு நாட்களுக்கு மட்டுமே சாப்பிடுங்கள். மதியத்துக்கும் சாப்பிட்டு, அதையே இரவு உணவுக்கும் சாப்பிடுவதையும் தவிருங்கள். ஆரோக்கியமானது என்பதற்காக அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக் கூடாது.
சிலருக்கு நீண்ட நேரம் பசியோடு இருந்தாலும் வயிற்றில் தசைப்பிடிப்பு, எரிச்சல் போன்ற உணர்வுகள் ஏற்படலாம்.
அதேபோல ஓர் உணவு பிடிக்கிறது என்பதால் அதிகம் உண்பதாலோ, நீண்ட நேரம் பசியோடு இருந்துவிட்டு சாப்பிடும்போது, சரியாக மென்று சாப்பிடாமல், அவசரம் அவசரமாக விழுங்குவதாலோகூட வயிற்றுவலி, வாய்வுத் தொந்தரவு போன்றவை வரலாம்.
ஒவ்வாத உணவுகளைச் சாப்பிட்டு இது போன்ற அவதிகளை எதிர்கொள்ளும்போது, 300 மில்லி தண்ணீரில் 2 டீஸ்பூன் சீரகம் அல்லது சோம்பு சேர்த்துக் கொதிக்க வைத்த நீரைக் குடிப்பது உடனடி நிவாரணம் தரும்.
அவ்வப்போது 30 முதல் 50 மில்லியாக நாள் முழுவதும் குடித்துக்கொண்டே இருக்கலாம். சாதாரண வெந்நீர்கூட பலனளிக்கும்.
பயணம் செய்கிறபோது வெந்நீரும், வாழைப்பழமும் எடுத்துச் செல்லுங்கள். உங்கள் வயிற்றைப் பதம் பார்க்காத உணவு வாழைப்பழம். வெந்நீரை அவ்வப்போது சிறிது சிறிதாகக் குடித்துக்கொண்டே இருப்பது வயிற்றுப் பிரச்சினைகள் வராமல் காக்கும்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: அமுதா ஐ.ஏ.எஸ். மாற்றம்? விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி… ஸ்டாலின் போடும் பிளான்!
கடைசி நேரத்தில் கேன்சல் – அப்டேட் குமாரு
ஹெல்த் டிப்ஸ்: ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் வாகனம் ஓட்டுகிறீர்கள்?