அமேசான் காடுகளில் இருந்து பறிக்கப்படும் மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் முதல், ஆனியன் ஜூஸ் வரை முடி உதிர்வுக்கான சிகிச்சைகளாக சமூக ஊடகங்களில் பரவும் ஆலோசனைகள் எக்கச்சக்கம்.
இந்த நிலையில் சின்ன வெங்காயத்தை அரைத்து அப்படியே தலையில் பூசினால் வழுக்கைத் தலையிலும் முடி வளரும் என்றபடி ஆளாளுக்கு அள்ளிப் பூசிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப் பூசுவதால் உண்மையிலேயே முடி வளருமா? அரோமாதெரபிஸ்ட்ஸ் சொல்லும் பதில் என்ன?
”தலைமுடியைப் பொறுத்தவரை இத்தனை நாட்களில் இத்தனை இன்ச்தான் வளரும் என்பது அறிவியல். எப்படிப்பட்ட எண்ணெய், தைலம், சீரம் தடவினாலும் தலைமுடியில் அசுர வளர்ச்சியை ஏற்படுத்துவதெல்லாம் சாத்தியமில்லை.
அப்படித்தான் சின்ன வெங்காயச்சாறும். வெங்காயத்தில் சல்ஃபர் (Sulphur) எனப்படும் கந்தகச்சத்து அதிகமிருக்கும். வெங்காயத்தை பச்சையாக அரைத்து அதை அப்படியே தலையில் தடவும்போது முடி மெலியும், உடையும்.
வெங்காயச் சாற்றைத் தலையில் தடவி, மணிக்கணக்கில் ஊறி, பிறகு குளிக்கும்போது, கொத்துக் கொத்தாக முடி உதிரும். அதன் கடுமையான கந்தகத்தன்மை, முடியின் ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல.
சின்ன வெங்காயச் சாற்றையோ, விழுதையோ தலையில் தடவும்போது அளவுக்கதிக அரிப்பை உணர்வார்கள். சொரிந்து சொரிந்து செதில் செதிலாகக் காணப்படும்.
வெங்காயச் சாறு தடவுவதால் கூந்தலில் அதன் வாடை படிந்து, தலைவலி, வீஸிங் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். தவிர, அந்த வாடை ஒருவித தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்.
அதிக கந்தகத்தன்மையின் காரணமாக, கண்களில் எரிச்சல், அரிப்பு, இமை முடிகள் உதிர்வது போன்றவையும் ஏற்படலாம்.
சின்ன வெங்காயச் சாறு தடவுவதால், ‘ஆண்ட்ரோஜெனடிக் அலோபேஷியா’ (Androgenetic alopecia ) எனப்படும் வழுக்கை பாதிப்பு சரியாகும் என்பதற்கு அறிவியல்ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை.
தவிர, தலையில் இயற்கையாகச் சுரக்கும் எண்ணெய்ப் பசையையும் வெங்காயச் சாறு அகற்றிவிடும். அதனால், மண்டைப்பகுதி வறண்டு போகும்.
தலையில் இயற்கையான எண்ணெய்ப்பசை இருப்பதுதான் ஆரோக்கியமானது. அது குறைந்து வறண்டுபோகும்போது முடி வறண்டு உதிரும். கூந்தலின் கறுப்பு நிறம் மாறி, செம்பட்டையாவதற்கும், நரைப்பதற்கும்கூட இது காரணமாகலாம். நிறைய பேருக்கு வெங்காயம் அலர்ஜியாக இருக்கும்.
ஆனால், அப்படி அலர்ஜி இருப்பதே தெரியாத நிலையில் வெங்காயத்தை அரைத்து தலையில் தடவும்போது, சுவாசப் பிரச்னை, வீஸிங் போன்றவை வரலாம்.
முடி வளர்ச்சிக்கு உங்கள் உணவின் மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துகளும் ஆக்ஸிஜனும் மட்டுமே உதவும். எனவே, இரும்புச்சத்து, துத்தநாகம், புரோட்டீன் என அனைத்துச் சத்துகளும் உள்ள சரிவிகித உணவுப்பழக்கம், கூந்தலை சுத்தமாகப் பராமரிப்பது, உடற்பயிற்சிகள் செய்வது ஆகியவை மட்டுமே கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று எச்சரிக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மைசூர் போண்டா
’ஆடி’ வந்தது… கண் கலங்குது : அப்டேட் குமாரு