அதிமுக அலுவலக சாவி: பன்னீரிடம் தர உச்ச நீதிமன்றம் மறுப்பு!

Published On:

| By Prakash

அதிமுக அலுவலக சாவி வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ஓ.பன்னீர்செல்வம் மனு இன்று (செப்டம்பர் 12)தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11ம் தேதி கலவரம் நடந்ததை அடுத்து, அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், சீல் அகற்றப்பட்டு, எடப்பாடி பழனிசாமி வசம் அலுவலக சாவி ஒப்படைக்கப்பட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு வழக்கு, இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், ஹிமா கோலி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், ”அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளார். அவருக்கு கட்சியின் அலுவலகத்திற்கு அனுமதி இல்லாதது கவலையளிக்கிறது.

எனவே, எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் வழங்கப்பட்டிருக்கிற அதிமுக அலுவலக சாவியை தம்மிடம் வழங்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், “ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி முதல் அனைத்து வகையான பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

எனவே, அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆகவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார்.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரஞ்சித்குமார், ”ஜூலை 11ம் தேதி இருதரப்பிற்கும் முதலில் மோதல் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டது. இதன் காரணமாகத்தான் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாகத்தான் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது” என தன் தரப்பு வாதத்தை வைத்தார்.

அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட கலவரம் மற்றும் வன்முறைக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், “அரசியல் கட்சி அலுவலகத்துக்கு தனிநபர்கள் போன்று இருவரும் அடித்துக்கொள்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

அதிமுக அலுவலகத்தில் நடந்த சண்டை என்பது அண்டை வீட்டுக்காரர்களின் இடையேயான பிரச்சினையல்ல. ஓர் அரசியல் கட்சியைச் செயல்படவிடாமல் தடுப்பதை ஜனநாயக நாட்டில் அனுமதிக்க முடியாது.

அலுவலக சாவியை பழனிசாமி தரப்புக்கு வழங்கியது தவறு எனக் கூற இயலாது” என்று தெரிவித்த நீதிபதிகள் ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டையும் தள்ளுபடி செய்தனர்.

வேண்டுமெனில் உரிமையியல் நீதிமன்றத்தை நாடுமாறும் ஓ.பன்னீருக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஜெ.பிரகாஷ்

அதிமுக அலுவலகத்துக்கு வந்த எடப்பாடி : செண்டை மேளத்துடன் வரவேற்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share